Sunday, December 7, 2008

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி

திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 9:37

கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.


இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.

ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.

இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.

தட்ஸ்தமிழ்.காம் , 08 டிசம்பர் 2008

1 பின்னூட்டங்கள்:

அக்னிக்குஞ்சு. December 7, 2008 at 9:45 PM  

சரத் பொன்சேகா 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான சிறிலங்கா படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கைவிட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

சிறிலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

சிறிலங்காவைப் பொறுத்த வரையில் மகிந்த இராசபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிலங்காவின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் மகிந்த இராசபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள சிறிலங்கா தூதுவரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்கா இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு சிறிலங்கா போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்றார் அவர்.

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP